சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
பண் - வியாழக்குறிஞ்சி   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் பருப்பதமங்கையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=70GGL3BPf4w
4.058   திருநாவுக்கரசர்   தேவாரம்   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருப்பதேசுவரர் மனோன்மணியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=q21t0hnipwo
7.079   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மானும், மரை இனமும், மயில்
பண் - நட்டபாடை   (திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) பருவதநாதர் பருவதநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DlIzx0Fux38

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.118   சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர  
பண் - வியாழக்குறிஞ்சி   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு பருப்பதமங்கையம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )
சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர அரைக்கு அசைத்தான்;
இடு மணி எழில் ஆனை ஏறலன், எருது ஏறி;
விடம் அணி மிடறு உடையான்; மேவிய நெடுங்கோட்டுப்
படு மணிவிடு சுடர் ஆர் பருப்பதம் பரவுதுமே.

[1]
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில்
நீ புல்கு தோற்றம் எல்லாம் நினை-உள்கு, மட நெஞ்சே!
வாய் புல்கு தோத்திரத்தால், வலம்செய்து, தலைவணங்கி,
பாய் புலித்தோல் உடையான் பருப்பதம் பரவுதுமே.

[2]
துனி உறுதுயர் தீரத் தோன்றி ஓர் நல்வினையால்
இனி உறுபயன் ஆதல் இரண்டு உற மனம் வையேல்!
கனி உறு மரம் ஏறிக் கருமுசுக் கழை உகளும்,
பனி உறு கதிர் மதியான், பருப்பதம் பரவுதுமே.

[3]
கொங்கு அணி நறுங் கொன்றைத் தொங்கலன், குளிர்சடையான்,
எங்கள் நோய் அகல நின்றான் என, அருள் ஈசன் இடம்
ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகு அழித்த
பைங்கண் வெள் ஏறு உடையான்-பருப்பதம் பரவுதுமே.

[4]
துறை பல சுனை மூழ்கி, மலர் சுமந்து ஓடி,
மறை ஒலி வாய் மொழியால், வானவர் மகிழ்ந்து ஏத்த,
சிறை ஒலி கிளி பயிலும், தேன் இனம் ஒலி ஓவா,
பறை படு விளங்கு அருவிப் பருப்பதம் பரவுதுமே.

[5]
சீர் கெழு சிறப்பு ஓவாச் செய்தவ நெறி வேண்டில்,
ஏர் கெழு மட நெஞ்சே! இரண்டு உற மனம் வையேல்!
கார் கெழு நறுங்கொன்றைக் கடவுளது இடம், வகையால்
பார் கெழு புகழ் ஓவா, பருப்பதம் பரவுதுமே.

[6]
புடை புல்கு படர் கமலம் புகையொடு விரை கமழ,
தொடை புல்கு நறுமாலை திருமுடி மிசை ஏற,
விடை புல்கு கொடி ஏந்தி, வெந்த வெண் நீறு அணிவான்-
படை புல்கு மழுவாளன்-பருப்பதம் பரவுதுமே.

[7]
நினைப்பு எனும் நெடுங்கிணற்றை நின்று நின்று அயராதே
மனத்தினை வலித்து ஒழிந்தேன்; அவலம் வந்து அடையாமை,
கனைத்து எழு திரள் கங்கை கமழ் சடைக் கரந்தான்தன்-
பனைத்திரள் பாய் அருவிப் பருப்பதம் பரவுதுமே.

[8]
மருவிய வல்வினை நோய் அவலம் வந்து அடையாமல்,-
திரு உரு அமர்ந்தானும், திசைமுகம் உடையானும்,
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

[9]
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர், சமண்குண்டர்
மடம் கொண்ட விரும்பியராய் மயங்கி, ஒர் பேய்த்தேர்ப் பின்
குடம் கொண்டு நீர்க்குச் செல்வார் போதுமின்! குஞ்சரத்தின்
படம் கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

[10]
வெண் செ(ந்) நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான்,
பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை,
நன் சொலினால் பரவும் ஞானசம்பந்தன், நல்ல
ஒண் சொலின் இவைமாலை உரு எண, தவம் ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.058   கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி  
பண் - திருநேரிசை:காந்தாரம்   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு மனோன்மணியம்மை உடனுறை அருள்மிகு பருப்பதேசுவரர் திருவடிகள் போற்றி )
கன்றினார் புரங்கள் மூன்றும் கனல்-எரி ஆகச் சீறி,
நின்றது ஓர் உருவம் தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு(வ்),
ஒன்றி ஆங்கு உமையும் தாமும், ஊர் பலி தேர்ந்து, பின்னும்
பன்றிப் பின் வேடர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[1]
கற்ற மா மறைகள் பாடிக் கடை தொறும் பலியும் தேர்வார்
வற்றல் ஓர் தலை கை ஏந்தி, வானவர் வணங்கி வாழ்த்த,
முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர்-தம்மைப்
பற்றினார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[2]
கரவு இலா மனத்தர் ஆகிக் கை தொழுவார்கட்கு என்றும்
இரவில் நின்று எரி அது ஆடி இன் அருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி,
பரவுவார்க்கு அருள்கள் செய்து, பருப்பதம் நோக்கினாரே.

[3]
கட்டிட்ட தலை கை ஏந்தி, கனல்-எரி ஆடி, சீறி,
சுட்டிட்ட நீறு பூசி, சுடு பிணக்காடர் ஆகி,
விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள் செய்து
பட்டு இட்ட உடையர் ஆகி, பருப்பதம் நோக்கினாரே.

[4]
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.

[5]
வேடராய், வெய்யர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஓடராய், உலகம் எல்லாம் உழி தர்வர், உமையும் தாமும்;
காடராய், கனல் கை ஏந்தி, கடியது ஓர் விடை மேற் கொண்டு
பாடராய், பூதம் சூழ, பருப்பதம் நோக்கினாரே.

[6]
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.

[7]
பேர் இடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன்; எந்தை; பெம்மான்;
கார் உடைக் கண்டர் ஆகி, கபாலம் ஓர் கையில் ஏந்தி,
சீர் உடைச் செங்கண் வெள் ஏறு ஏறிய செல்வர்-நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பதம் நோக்கினாரே.

[8]
அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே
உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும்!
செங்கண் மால் பரவி ஏத்திச் சிவன் என நின்ற செல்வர்
பைங்கண் வெள் ஏறு அது ஏறிப் பருப்பதம் நோக்கினாரே.

[9]
அடல் விடை ஊர்தி ஆகி, அரக்கன் தோள் அடர ஊன்றி,
கடல் இடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார் தாம்
சுடர்விடு மேனி தன்மேல் சுண்ண வெண் நீறு பூசி,
படர் சடை மதியம் சேர்த்தி, பருப்பதம் நோக்கினாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.079   மானும், மரை இனமும், மயில்  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) ; (திருத்தலம் அருள்தரு பருவதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பருவதநாதர் திருவடிகள் போற்றி )
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனை நீர்களைப் பருகி,
பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு,
தேமாம் பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பத மலையே.

[1]
மலைச் சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள்
மலைப் பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி, தன களிற்றை
அழைத்து ஓடியும், பிளிறீயவை அலமந்து வந்து எய்த்து,
திகைத்து ஓடி, தன் பிடி தேடிடும் சீ பர்ப்பத மலையே.

[2]
மன்னிப் புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க,
கன்னிக் கிளி வந்து(க்) கவைக் கோலிக் கதிர் கொய்ய,
என்னைக் கிளி மதியாது என எடுத்துக் கவண் ஒலிப்ப,
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீ பர்ப்பத மலையே.

[3]
மை ஆர் தடங்கண்ணாள் மட மொழியாள் புனம் காக்கச்
செவ்வே திரிந்து, ஆயோ! எனப் போகாவிட, விளிந்து,
கை பாவிய கவணால் மணி எறிய(வ்) இரிந்து ஓடிச்
செவ்வாயன கிளி பாடிடும் சீ பர்ப்பத மலையே.

[4]
ஆனைக் குலம் இரிந்து ஓடி, தன் பிடி சூழலில்-திரிய,
தானப் பிடி செவி தாழ்த்திட, அதற்கு(ம்) மிக இரங்கி,
மானக் குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி,
தேனைப் பிழிந்து இனிது ஊட்டிடும் சீ பர்ப்பத மலையே.

[5]
மாற்றுக் களிறு அடைந்தாய் என்று மதவேழம் கை எடுத்து,
மூற்றித் தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய,
தூற்றத் தரிக்கில்லேன் என்று சொல்லி(ய்) அயல் அறியத்
தேற்றிச் சென்று, பிடி சூள் அறும் சீ பர்ப்பத மலையே.

[6]
அப்போது வந்து உண்டீர்களுக்கு, அழையாது முன் இருந்தேன்;
எப்போதும் வந்து உண்டால், எமை எமர்கள் சுளியாரோ?
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி, அக் கிளியைச்
செப்பு ஏந்து இளமுலையாள் எறி சீ பர்ப்பத மலையே.

[7]
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன் தன கழலை
அரிய திருமாலோடு அயன் தானும்(ம்) அவர் அறியார்;
கரியின்(ன்) இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்துத்
திரி தந்தவை, திகழ்வால் பொலி சீ பர்ப்பத மலையே.

[8]
ஏனத்திரள் கிளைக்க(வ்), எரி போல(ம்) மணி சிதற,
ஏனல்(ல்) அவை மலைச்சாரல் இற்று இரியும் கரடீயும்,
மானும், மரை இனமும், மயில் மற்றும், பல எல்லாம்,
தேன் உண் பொழில்-சோலை(ம்) மிகு சீ பர்ப்பத மலையே.

[9]
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல்(ல்) உற அரிய சிவன் சீ பர்ப்பத மலையை
அல்லல் அவை தீரச் சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லைச் செல, உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list